பேச்சிப்பாறை அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
திற்பரப்பு அருவியில் சிறுவர் பூங்காவை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.
திற்பரப்பு அருவியில் சிறுவர் பூங்காவை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்புகிறது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்ட நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மலையோர பகுதியான பாலமோர் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து மட்டுமே உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.23 அடியாக இருக்கிறது. அந்த அணைக்கு வினாடிக்கு 3,010 கனஅடி தண்ணீர் வருகிறது. 5,088 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் குழித்துறை ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அந்த ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிவருகிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

பெருஞ்சாணி அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.83அடியாக இருக்கிறது. அந்த அணைக்கு 829 கனஅடி தண்ணீர் வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும் இருக்கிறது. முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com