நாகர்கோவிலில் தற்கொலை செய்த தம்பதி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாகர்கோவிலில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட  காதல் தம்பதி
தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதி
Published on

நாகர்கோவில்:

தூத்துக்குடி சிதம்பரநகரைச் சேர்ந்தவர் மகாவைகுண்டம் (வயது 25). நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கரிசூழ்ந்தாள் என்ற கஸ்தூரி (24). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கோட்டார் பறக்கை ரோடு பைத்துல்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். மகாவைகுண்டம் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஒப்பந்த முறையில் செய்து வந்தார். இந்த நிலையில் மகாவைகுண்டம்-கஸ்தூரி ஆகியோர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள 2 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்து நாகர்கோவில் வரவழைத்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் விசாரணை நடத்தினார். இதில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், திருமணத்துக்குப்பிறகு குமரி மாவட்டத்துக்கு வந்து வசித்ததும் தெரியவந்தது. குழந்தை இல்லாத ஏக்கம் அவர்கள் 2 பேரையும் வாட்டி வதைத்துள்ளது. இதுதொடர்பாக இருவரும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் மகா வைகுண்டத்தின் நண்பர்களிடமும் கூறி வருத்தப்பட்டதாகவும், அதன்காரணமாகவே இருவரும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் மகாவைகுண்டத்துக்கு கடன் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து நேற்று மகா வைகுண்டம், கஸ்தூரி ஆகியோரின் உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

பின்னர் 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட உறவினர்கள், நாகர்கோவில் புளியடியில் உள்ள எரிவாயு தகன மையத்தில் 2 பேரின் உடல்களையும் தகனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com