பரமத்தி அருகே லாரி திருடியவர் கைது

பரமத்தி அருகே லாரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம், குஞ்சு காட்டுபுதூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). இவர் தனது ரூ.11 லட்சம் மதிப்பிலான டிப்பர் லாரியை கடந்த 1-ந் தேதி பரமத்தி அருகே உள்ள ஒரு லாரி பட்டறையில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் பட்டறைக்கு சென்று பார்த்தபோது டிப்பர் லாரி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் லாரி கிடைக்காததால் கடந்த 4-ந் தேதி பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கீரம்பூர் டோல்கேட் அருகே பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்குரிய ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் விருதுநகர் மாவட்டம், முத்துகுறிச்சி பகுதியை சேர்ந்த தேசியநேந்தலை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகன் ஜெயபிரகாஷ் (21) என்பதும், இவரும் இவரது சகோதரர் வாணி கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் மாங்குளம் கருப்பு என்கிற முத்து கருப்புசாமிஆகியோர் கடந்த 1-ந் தேதி பரமத்தி அருகே உள்ள லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியை திருடி சென்றதும் தெரிய வந்தது. அதனையடுத்து ஜெயபிரகாசை கைது செய்த போலீசார் தலைமறைவான முத்துகருப்புசாமி மற்றும் வாணி கருப்பசாமி ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் திருட்டு போன டிப்பர் லாரியையும் பரமத்தி போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com