3-வது மாடியில் இருந்து விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை மண்ணடியில் பால்கனியில் விளையாடியபோது, 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை உயிரிழப்பு
குழந்தை உயிரிழப்பு
Published on

சென்னை:

சென்னை மண்ணடி இப்ராகிம் சாகிப் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வருபவர் செல்வக்கனி. இவர், சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு 3 மகள்கள். இதில் 3-வது மகளான 1½ வயதான ஆசியா, நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டு இருந்தாள். ஜாஸ்மின், சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பால்கனி தடுப்பு கம்பியில் ஏறி இறங்கி விளையாடிய குழந்தை ஆசியா, எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாள்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆசியா பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து அதன்பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com