

திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரி மல்லையபல்லியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராம மக்கள் வீடுகள் தோறும் 10 முதல் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையன்று நாட்டுக்கோழிகள் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்ய இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்த்து வரும் நாட்டுக்கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து துடிதுடித்து இறந்தன.
பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் இறந்ததா என்று கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கால்நடைத் துறை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை டாக்டர்கள் மல்லையபல்லி கிராமத்துக்கு வந்து மர்மமாக இறந்த கோழிகளை கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். சோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலில் இறக்க வில்லை என தெரியவந்தது.
இருந்தபோதிலும் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் நோய் ஆந்திராவிலும் பரவியதா? என சந்தேகம் அடைந்துள்ளனர்.