search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- 39 பக்க பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி

    • பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது.

    பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்தது.

    அப்போது வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காரணத்தினாலேயே பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் என்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக தங்கள் தரப்பு பதில் மனுக்களை எழுத்துப்பூர்வ பதிலாக நேற்று தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 18 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பதில் மனுவில் தெள்ளத்தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் பொதுக்குழுவே உச்சபட்ச அங்கீகாரம் படைத்த அமைப்பாகும். இதனை கூட்டியே கட்சியின் அனைத்து முடிவுகளும் இதற்கு முன்பு எடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகாரம் செய்துள்ளனர்.

    ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்க முடியாது என்பதாலேயே பொதுக்குழு அதிகாரம் மிக்க அமைப்பாக அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விஷயங்களையும் கேட்பதற்கு தொண்டர்களிடம் செல்வது சிரமமான காரியமாகும். இதற்காகவே பொதுக்குழு உள்ளது.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் அப்போது பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரத்தாலேயே உருவாக்கப்பட்டன. அப்படி இருக்கும் போது அந்த பதவிகளை நீக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உண்டு.

    பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது. தனி நபர் ஒருவர் பயன் அடையும் வகையிலும் அந்த தீர்ப்பு உள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றே பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். எனவே பொதுக்குழுவை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியதில் எந்தவிதமான விதி மீறல்களும் இல்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இது போன்ற விரிவான அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர்களும் 18 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபர் பயன் அடையும் வகையில் ஜூலை 11-தேதி நடைபெற்ற பொதுக்குழு அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. அந்த பதவிக்கு இனி யாரும் வரக்கூடாது என்பதற்காகவே 2017-ம் ஆண்டில் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகளே நிர்வாக பதவிகளாகும். இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் காலாவதியாகாமல் இருக்கும் நிலையில் கட்சியின் விதிகளில் தன்னிச்சையாக திருத்தம் செய்து எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்துள்ளார்.

    எனவே பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல தகவல்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து எழுத்துப்பூர்வ பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அரசியல் களத்திலும் பலத்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×