பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது

வங்கிக்கடன் மோசடி, கார்த்தி சிதம்பரம் கைது, மூன்று மாநில தேர்தல் முடிவுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. #BudgetSession #Parliament
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி தொடங்கியது. இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதியில் பிப்ரவரி 1-ந்தேதி நிதி மந்திரி அருண்ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த 9-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. பின்னர் இரு அவைகளுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த அமர்வில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும். வங்கிக் கடன் மோசடி விவகாரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் இந்த கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி குறித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதன் மீது அவைத்தலைவர் எடுக்கும் முடிவைப் பொருத்தே இன்றைய அவை நடவடிக்கைகளில் காங்கிரசின் செயல்பாடு இருக்கும்.

முதற்கட்ட கூட்டத் தொரைப் போன்று இந்த கூட்டத் தொடரிலும், ஆந்திர மாநிலத்துக்கு, சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் பிரச்சினை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com