மதுரை கிரானைட் நிறுவனங்களின் ரூ.200 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட மதுரை கிரானைட் நிறுவனங்களின் ரூ.200 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை கிரானைட் நிறுவனங்களின் ரூ.200 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
Published on

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் நிறுவனங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வந்தன.

இதன் மூலம் அரசுக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கிரானைட் நிறுவனங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மதுரையை மையமாக கொண்டு இயங்கிவரும் எம்.ஆர். கிரானைட்ஸ், ஆர்.ஆர்.கிரானைட்ஸ் ஆகியவை மேலூர், கீழ வளவு, ராசிபுரம் உள்ளட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது.

எனவே கடந்த 2012 வரை கிரானைட் ஏற்றுமதி செய்த வகையில் ரூ.450 கோடி மதிப்புள்ள அரசு சொத்துக்களை மறைமுகமாக அபரிகத்ததாக இந்த கிரானைட் நிறுவனங்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு கிரானைட் ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றமும் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறைக்கு தமிழக போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் கிரானைட் நிறுவனங்கள் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2 கிரானைட் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 517 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில கிரானைட் நிறுவனங்களின் சொத்துக்களையும் முடக்க அமலாக்கத்துறை பரிசீலித்து வருகிறது. எனவே அமலாக்கத்துறை நடவடிக்கை மேலும் சில கிரானைட் நிறுவனங்கள் மீது விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com