காரில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா சிக்கியது- 4 பேர் தப்பி ஓட்டம்

காரைக்குடியில் காரில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சிக்கியது. அதில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கஞ்சா (கோப்புப்படம்)
கஞ்சா (கோப்புப்படம்)
Published on

காரைக்குடி:

காரைக்குடியில் ஜெயங்கொண்டான்- நாட்டுச்சேரி சாலையில் அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ஏட்டு பழனிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் ஒரு கார் நின்று இருந்தது. அதில் இருந்த 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். திடீரென 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் காரை சோதனையிட்டபோது காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. 15 பெரிய பார்சல்களில் 100 சிறு, சிறு பொட்டலங்களாக மொத்தம் 34 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

அவற்றை கைப்பற்றிய போலீசார், கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கே கொண்டு செல்ல இருந்தனர்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா இருந்த கார் குறித்து விசாரித்தபோது அந்த கார் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், மேல்விசாரணை நடத்தி வருகிறார். சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடிவருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com