

கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இணையத்தில் அமைய இருந்த சரக்கு பெட்டக துறைமுகம் தற்போது கன்னியாகுமரி அருகே கோவளம்-மணக்குடிக்கு இடையே அமைக்கப்படுகிறது.
கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்காக போலீஸ் அனுமதியும் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே துறைமுகம் அமைக்க வேண்டும் என இன்னொரு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களும் இன்று பாரதிய ஜனதா கட்சி தலைமையில் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என கருதிய மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இரு தரப்பினரின் போராட்டத்திற்கும் தடை விதித்தனர். மீறி போராடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
போலீசாரின் அனுமதி மறுப்பு பற்றி தெரிய வந்ததும் துறைமுக எதிர்ப்பு குழுவினர் நாகர்கோவிலில் நடைபெறுவதாக அறிவித்த போராட்டத்தை கோவளம் கடற்கரை பகுதிக்கு மாற்றினர்.
அங்கு கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, குமரி மாவட்டத்தின் கடலோர கிராமமக்கள் மற்றும் துறைமுகத்தை எதிர்க்கும் கிராமமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று காலை முதல் கோவளம் கடற்கரையில் திரண்டனர்.
அவர்கள் கட்டுமரங்கள், வள்ளங்களை கோவளம் கடல் பகுதியில் வரிசையாக நிற்க வைத்தனர். அவற்றில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. ஆண்கள் அனைவரும் கட்டு மரம், வள்ளங்களில் ஏறி கடலுக்குள் சென்று துறைமுகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுபோல போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கடற்கரையில் அணி வகுத்து நின்றனர். அவர்களும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி துறைமுக எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
இப்போராட்டத்திற்கு கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னாண்டோ தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ். பார்த்தசாரதி, முருகேசன், வக்கீல் ஸ்ரீதரன், செயலாளர் வெனிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துறைமுக எதிர்ப்பு போராட்டத்தையொட்டி நேற்று போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஆயிரம் போலீசார் குமரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இன்று காலையில் போலீஸ் ஐ.ஜி. தலைமையில் அவர்கள் கன்னியாகுமரி, கோவளம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
கடற்கரை கிராமங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் நாகர்கோவில் நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews