புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

கடலில் சூறாவளி காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி  உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்கிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று  வருகிறார்கள். மேலும் பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். 

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  எனக் கூறி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் இன்று  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. 

இதனால் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை இழந்துள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com