

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் இன்று கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரியவில்சனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மரியவில்சன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்ப பிரச்சனை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று ஐகோர்டில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்த நீதிபதி, 13-ந்தேதி அமைச்சர் மரியவில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரின் மனைவி ஆகியோரை சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அதேசமயம், புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி ஜே.எம். 1 கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மரிய வில்சன் தரப்பில் ஐகோர்ட்டு வழக்கறிஞர் அஜித்குமார் ஆஜரானார். அப்போது சென்னை ஐகோர்ட் இந்த வழக்கில் மரிய வில்சன் ஆஜராக வேண்டாம் என்று விலக்கு அளித்த உத்தரவு நகலை சமர்ப்பித்தார். இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.