

புதுவை குருமாம்பேட்டில் இயங்கி வந்த 'மெடினோக் ஹெல்த் கேர்'என்ற நிறுவனத்தில், போலி மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுவதை மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நிறுவன உரிமையாளரான புதுவை சண்முகாபுரம் பிரபாகரன்(52) கைது செய்யப்பட்டார். தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் பிரபாகரன் நடத்தி வந்த குடோவுனை தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த 14-ந்தேதி முதல் 3 நாள் சோதனை நடத்தினர். இங்கு 625-க்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரித்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த போலி மருந்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாளில் வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இதனிடையே தமிழக பகுதியான பூத்துறையில் 'சீல்' வைக்கப்பட்ட குடோனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மருந்து ததர கட்டுப்பாட்டு துறை அனுமதி கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குடோனை மருந்து தரக்கட்டுப்பாட்டு துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனுமதி வழங்கினார்.
இதையடுத்து குடோன் வளாகத்தில் சிசிடிவி பொருத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொடர்ந்து சிசிடிவி மூலம் கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், குடோனை நிர்வகித்து வந்த சிவா பிரவீனுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை துறை இயக்குநருக்கு சமர்பித்து, வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.