நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது

முதல்-அமைச்சர் ரங்கசாமி நாள், நட்சத்திரம் பார்ப்பதில் தீவிர பற்று கொண்டவர். இதனால் ஆடி மாதம் முழுவதும் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.
புதுவை சட்டசபை
Published on

புதுவை மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.

முழுமையான பட்ஜெட்

அதற்கு பதிலாக 5 மாதத்துக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்து மீண்டும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 5 மாத இடைக்கால பட்ஜெட் காலம் முடிகிறது. இதனால் முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு புதுவை அரசின் நடப்பு ஆண்டு பட்ஜெட் தொகை ரூ.14 ஆயிரத்து 300 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இம்மாத இறுதியில் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாளை வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறக்கிறது. வழக்கமாக ஆடி மாதத்தில் சுப காரியங்களை தொடங்குவதில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நாள், நட்சத்திரம் பார்ப்பதில் தீவிர பற்று கொண்டவர். இதனால் ஆடி மாதம் முழுவதும் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.

ரங்கசாமி திட்டம்

ஆகஸ்ட் 18-ந்தேதி ஆவணி மாதம் பிறக்கிறது. அப்போதுதான் சட்டசபை கூடும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே தற்காலிக சபாநாயகர் அன்பழகனை வைத்தே சட்டசபையை நடத்தவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ரங்கசாமி கலந்து பேசியுள்ளார். அப்போது அவர்கள், புதிதாக சபாநாயகர் நியமிக்கும்வரை தற்காலிக சபாநாயகர் பதவியில் நீடிக்கலாம் என கருத்தும் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com