உடல்நலக்குறைவால் நான் சாக வேண்டும் என சிலருக்கு விருப்பம் - பினராயி விஜயன்

விபத்து அல்லது உடல்நலக்குறைவால் நான் சாக வேண்டும் என சிலருக்கு விருப்பம் என்று சிகிச்சை முடிந்து திருவனந்தபுரம் திரும்பிய கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
உடல்நலக்குறைவால் நான் சாக வேண்டும் என சிலருக்கு விருப்பம் - பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்:

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன். இவர், கடந்த சனிக்கிழமை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

பினராயி விஜயன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதில், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை பினராயி விஜயனின் செயலாளர் மறுத்தார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும், பரிசோதனை முடிந்ததும் திருவனந்தபுரம் திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, பினராயி விஜயனும், அவரது மனைவி கமலாவும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று திருவனந்தபுரம் திரும்பினர். விமான நிலையத்தில் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 15 ஆண்டுகளாக உடல் பரிசோதனை செய்து வருகிறேன். இப்போதும் அதற்காகவே சென்றேன். எனக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை. இது வழக்கமான பரிசோதனைதான்.

ஆனால் நான், இறந்து போக வேண்டும் என்பது இங்குள்ள சிலரின் விருப்பம். ஒருமுறை நான் ஏ.கே.ஜி. சென்டருக்கு சென்றபோது, சிலர் பேசிக் கொண்டிருப்பதை தற்செயலாக கேட்டேன்.

சாலையில் பலர் வாகன விபத்தில் பலியாகிறார்கள். அதுபோல ஒரு வாகனம் இவர் மீது மோதி இறக்க மாட்டாரா? என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவரின் சாவு, இன்னொருவரின் விருப்பப்படி நடக்காது. அதுதான் உண்மை. இப்போது எனக்கு நடந்த உடல் பரிசோதனையில் எந்த குறைபாடும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிபுராவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோல்வியை தழுவி உள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது, இப்போது அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com