

புதுடெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது மாதந்தோறும் இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாள் மற்றும் 16-ம் தேதி வாக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இதனையடுத்து, இந்த நடைமுறையை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை வருகின்ற ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஜூன் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் வாங்கவோ, விற்கவோ மாட்டோம் என்று அறிவித்தனர்.
இதனிடையே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தினசரி விலை நிர்ணயித்துக்கு எதிராக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்க வேண்டாம் என சந்திப்பின் போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரிடையே உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய தர்மேந்திர பிரதான், தினசரி விலை நிர்ணய முறை திட்டமிட்டபடி நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
தினசரி விலை நிர்ணய முறை ஏற்கனவே 5 நகரங்களில் மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது அது விரிவாக்கம் மட்டுமே செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.