

திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் வினு(வயது 37) இவரது மனைவி மாலதி (35). இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாலதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 4-வது மண்டல செயலாளர் வடிவேலு மற்றும் அருணாச்சலம் ஆகியோருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீதிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் கடன் வழங்கும் கிரெடிமி என்ற நிறுவன செயலி மூலம் ரூ.3,500 கடனாக பெற விண்ணப்பித்தேன். இதில் வட்டி போக மீதி பணம் எனது கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட நாளில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு செல்போன் எண்களில் இருந்து எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனது செல்போனில் இருந்து எனது புகைப்படம் மற்றும் உறவினர், நண்பர்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை திருடி உள்ளனர். பின்னர் பிராடு மாலதி என்ற பெயரில் எனது படத்துடன் ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் என்னை பற்றி அவதூறான செய்திகளை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து எனது உறவினர்கள்,நண்பர்கள் எனக்கு தெரிவித்தனர்.எனது புகைப்படம்.தகவல்களை திருடி எனது படத்துடன் தவறாக சித்தரித்து பொதுவெளியில் எனது குடும்பத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.