ஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை

ஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர் (கோப்பு படம்)
முதியோர் (கோப்பு படம்)
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே கீசரா பகுதியில் ‘மமதா’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் இயங்கி வந்தது.

இங்கு ஏராளமான முதியவர்கள் தங்கி இருந்தனர். சமீபத்தில் அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட முதியவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கூறினர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் காப்பகத்திற்கு சென்றபோது அங்கு முதியவர்களை பூட்டி சிறை வைத்திருப்பதும், அவர்களை சங்கிலியால் கட்டி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.

மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் முதியவர்களை சங்கிலிகளால் கட்டி சித்ரவதை செய்ததும் அம்பலமானது. இந்த காப்பகத்தில் முதியவர்களை பராமரிப்பதற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

ஆனால் அவர்களை உரிய முறையில் பராமரிக்காமல் சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட முதியவர்களை போலீசார் மீட்டனர்.

இதில் 5 பேரை அவர்களது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். 21 மூதாட்டிகள் மற்றும் 56 ஆண் முதியவர்கள் வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திரும்ப அழைத்து செல்லாத குடும்பத்தினர் மீது மூத்தகுடி மக்கள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் முதியவர்களை கெடுமை செய்த காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர். காப்பக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com