துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடியில் நாளை விசாரணை

துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தூத்துக்குடியில் விசாரணையை நாளை தொடங்குகின்றனர். #ThoothukudiShooting #NHRC
துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடியில் நாளை விசாரணை
Published on

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் மோதலாக மாறியது.

இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.

விசாரணைக்கு பின்னர் 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

தொடர்ந்து அந்த குழுவினர் நாளை (3-ந்தேதி) தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர். பின்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கபட உள்ளது. #ThoothukudiShooting #NHRC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com