

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்குள்ள ஊழியர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் உத்தரகாண்ட் பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இது தொடர்பாக கூறியதாவது:-
எனக்கு ஒரேயொரு கோள்வி மட்டுமே உள்ளது. அது இந்த நன்கொடை திருட்டுக்காக பொறுப்பு ஏற்கப்போவது யார்?. ராமர் கோவில் அறக்கட்டளை பிரதமர் மோடியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் அமைதியாக இருப்பது ஏன்?.
உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் முக்கியமாக காங்கிரஸ் கட்சி எழுப்பும்.
இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ரா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், அவரது தந்தை பச்சுலாலை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கைதான எட்டு பேரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 77.85 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி, இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான அமெரிக்க டாலர்களும் சோதனையில் சிக்கியுள்ளன.
கைதான அவினாஷ் சுக்லா, கண்காணிப்பு கேமராக்கள் குறைபாடுகளை பயன்படுத்தி, காணிக்கை எண்ணும் அறையில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக திருடி, கோவிலுக்குள் இருக்கும் கழிப்பறையில் வைத்துவிட்டு, பின்னர் சிறிது, சிறிதாக அதை வெளியே எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.