

பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்ட தனது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.
பிரஷாந்த் கிஷோர் அசையும் சொத்துக்களாக ரூ. 22.19 கோடி, அசையா சொத்துக்களாக ரூ. 73.87 கோடி என மொத்தம் ரூ. 96.06 கோடி சொத்துக்களை வைத்துள்ளார்.
பிரஷாந்த் கிஷோரின் மனைவி ஜாஹ்னவி தாஸ், அசையும் சொத்துக்களாக ரூ. 89.51 கோடி, அசையா சொத்துக்களாக ரூ. 12.42 கோடி என மொத்தம் ரூ. 101.93 கோடி சொத்து வைத்துள்ளார்.
தம்பதியரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 197.99 கோடி. மேலும், பிரஷாந்த் கிஷோர் தன் மீது ரூ. 5.77 கோடி வங்கி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தன் மீது அவதூறு வழக்கு, அரசுப் பணியை தடுத்தல் மற்றும் மோசடி உள்ளிட்ட மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் பிரமாண பாத்திரத்தில் கூறியுள்ளார்.
தான் உரிமையாளராக உள்ள 'வேதா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், 2024-25 நிதியாண்டில் 'ஜன் சுராஜ்' கட்சிக்கு ரூ. 85 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணராக இருந்தாலும் கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை களம் கண்ட அவரின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் பீகார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பதவியை துறந்து தேசிய அரசியலுக்கு சென்றதால் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்திரி தற்போது முதல்வராக உள்ளார்.
நிதிஷ் குமாருக்கு வாக்களித்துவிட்டு இப்போது பாஜகவால் பீகாரின் முதன்மை அதிகாரம் கைப்பற்றப்பட்டது அங்குள்ள மக்கள் மனநிலையில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் பாங்கிபூர் தொகுதியில் அவருக்கு எதிராக நின்ற பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்று சென்றதும் இதன் முன்னோட்டமாக பார்ப்படுகிறது. பாஜகவின் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் வாபஸ் வாங்கி ஓடியது இதுவே முதல் முறை என பிரசாந்த் கிஷோரும் இது குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.