

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு ஆறுநாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டார்.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம், மூலோபாயக் கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதையும், இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' மற்றும் 'இந்தோ-பசிபிக்' முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் 'மகாசாகர்' தொலைநோக்கத் திட்டத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் உள்ளது.
அத்துடன் இந்த பயணம், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் இந்தியாவிற்கு அதிக வருவாய் கிடைப்பதோடு, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு ஊதியமும் உயரும்.
இந்த பயணத்தின் போது நாட்டின் தலைவர்களிடையே நடைபெறும் கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, விளையாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் ஆகியவை இடம்பெற உள்ளது.
இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
அடுத்த சில நாட்களில், நான் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளேன். இந்த மதிப்புமிக்க வளர்ச்சிப் பங்காளிகளுடன் பொருளாதார மற்றும் உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், வரும் காலங்களில் நமது தேசத்தின் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்தச் சந்திப்புகளின் நோக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் இன்று முதல் ஜூலை 8 வரை இந்தோனேசியாவில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடி பின்னர், யோக்யகார்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயிலுக்கு ஜனாதிபதி பிரபோவோவுடன் பயணம் மேற்கொள்வார்.
இந்தப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மோடி மெல்போர்ன் செல்கிறார். அங்கு அவர், இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்தும் நோக்கில், தனது ஆஸ்திரேலிய நன்பர் ஆண்டனி அல்பானீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இறுதியாக பிரதமர் மோடி, நியூஸ்லாந்தில் உள்ள ஆக்லாந்திற்கு பயணம் மேற்கொள்வார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிக ரீதியான ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.