

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் அமைச்சரிடம் டிக்கெட்டிற்கு சில்லறை இல்லை என நடத்துனர் இறக்கிவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை நேரடியாக கண்டறிய கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி விரும்பியுள்ளார்.
எனவே நேற்று மாலை முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு, பூபசந்திரா பகுதியிலிருந்து ஹெப்பல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறினார்.
பேருந்தில் இரண்டு டிக்கெட்டுகள் கேட்ட அமைச்சர், அதற்காக நடத்துனரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார்.
டிக்கெட் கட்டணமான 12 ரூபாயைக் கச்சிதமாக வழங்குமாறு நடத்துனர் கேட்டுள்ளார்.
தன்னிடம் சில்லறை இல்லை என்று அமைச்சர் கூற, திருப்பித் தர என்னிடமும் சில்லறை இல்லை. சரியான தொகையைத் தர முடியாவிட்டால் பேருந்தை விட்டு இறங்குங்கள் என்று நடத்துனர் கறாராக கூறியுள்ளார்.
அமைச்சர் தனது முகத்தை மறைத்திருந்ததால் நடத்துனரால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
தன்னிடம் சில்லறை இல்லை என்றதும் வாக்குவாதம் செய்யாமல், அமைதியாகப் பேருந்தை விட்டு அமைச்சர் கீழே இறங்கினார்.
தொடர்ந்து, மாலை முதல் இரவு வரை பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
பணிமனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், தினசரி பேருந்து சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
மேலும் பேருந்து நிலையங்களில் இருந்த பயணிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆய்வின் முடிவில், பயணிகளை அலைக்கழித்த ஊழியர்களை நேரில் அழைத்து அமைச்சர் கடுமையாக எச்சரித்தார்.
கடமை தவறிய சில அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்ய அமைச்சர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.