குஜராத்தில் ரூ.400 கோடி மோசடி.. பங்குச்சந்தையில் லாப ஆசை காட்டி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஏமாற்றிய இருவர் கைது

வாக்குறுதி அளித்தபடியே 20% லாபத்தை வழங்கியுள்ளனர்.
மோசடி
மோசடி
Published on

குஜராத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டின் மூலம் மாதம் 20% வரை உறுதியான லாபம் தருவதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களிடம் சுமார் ரூ. 300 முதல் 400 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கிராமங்களில் நடந்த இந்த மோசடியில் அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த யோகேஷ் தமேச்சா மற்றும் அவரது நெருங்கிய உறவினரான சஞ்சய் தமேச்சா முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

மோசடி

இவர்களை நம்பி ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்கள் வாக்குறுதி அளித்தபடியே 20% லாபத்தை வழங்கியுள்ளனர்.

ஆனால், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்த லாபம் அல்ல. மாறாக, புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளனர்.

அதை தங்கள் முதலீட்டுக்கு கிடைத்த லாபம் என நம்பி பலர் அந்த செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு கிராமமாக செய்தி பரவ, சௌராஷ்டிராவின் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை இவ்வாறு நம்ப வைத்துள்ளனர்.

கைது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இவர்களது இந்த மோசடி அம்பலமாக தொடங்கியதும், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துக்கொண்டு இருவரும் தலைமறைவாகினர். சுமார் ரூ. 300 முதல் 400 கோடி வரை அவர்கள் சுருட்டியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தற்போது இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக நிர்வாகி

கைதான யோகேஷ் தமேச்சா கடந்த 2 ஆண்டுகளாக பாவ்நகர் மாவட்ட பாஜக அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆளும் கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கையும், அதிகாரப் பதவியையும் காட்டியே யோகேஷ் தமேச்சா சாமானிய மக்களிடம் மிக எளிதாக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது வரை 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நேரடியாகப் புகார்களை அளித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மோசடியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com