

உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 12 இடங்கள் பின்னுக்கு சென்றிருக்கிறது. இந்த பட்டியலில் 19 ஆண்டுகளாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து உலகின் அமைதியான நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
நாடுகளின் சமூக பாதுகாப்பு மற்றும் அமைதி, நடந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், ராணுவமயமாக்கல் ஆகிய 3 முக்கிய பிரிவுகளின்கீழ் 23 காரணிகள் ஆராயப்பட்டு இந்த பட்டியல் வெளியாகிறது.
அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் 16-வது இடத்திலும், இலங்கை 67, நேபாளம் 111-வது இடம், வங்காளதேசம் 117-வது இடங்களில் இருக்கையில் இந்தியா 127-வது இடத்தில் உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு 152-வது இடம் கிடைத்திருக்கிறது.
கடந்த 2025-ம் ஆண்டைவிட 12 இடங்கள் இந்தியா பின்னுக்கு சென்றுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் 115-வது இடத்தில் இருந்தது. 2007-ம் ஆண்டில் 109-வது இடத்தில் இருந்த நிலையில், தொடர்ந்து பின்னுக்கு சென்றபடி, கடந்த 2015-ம் ஆண்டில் 143-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பிறகு முன்னேறி வந்து, நடப்பாண்டில் மீண்டும் சறுக்கலை சந்தித்திருக்கிறது. எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பின்னுக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.