

ஜார்கண்டில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் அதற்கு தண்டனையாக பஞ்சாயத்தில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து கிராமத்தினர் விருந்து நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் காக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சுனில் லோஹ்ரா என்ற நபர் தனக்கு அறிமுகமான ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியும் அவரது தாயும் இருந்துள்ளனர். சிறுமியின் தாய் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்ததால் குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாக கூறி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி திடீரென கத்தி அழுததைக் கேட்டு ஓடிவந்த தாய், சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்காமல், சம்பவம் நடந்த அடுத்த நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை, கிராமப் பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டி இந்த விவகாரத்தை அங்கேயே முடிக்க முயற்சி நடந்துள்ளது.
பஞ்சாயத்தில் குற்றவாளி சுனில் லோஹ்ராவுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
குற்றவாளி உடனடியாகத் தன் கைவசம் இருந்த 20,000 ரூபாயைப் பஞ்சாயத்திடம் கொடுத்துள்ளார்.
அதைப் பெற்றுக்கொண்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்கள், அந்தப் பணத்தை வைத்து அன்றே கிராமத்தில் மட்டன் சமைத்து, மது வாங்கி பெரிய விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துக் கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அன்றே கிராமத்திற்குள் வந்த போலீசார், விருந்து நடந்துகொண்டிருந்தபோதே குற்றவாளி சுனில் லோஹ்ராவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தலைவர் இதுகுறித்து கூறுகையில், "இந்தக் கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை; போலீசார் வந்த பிறகே எனக்கு இந்த விவகாரம் தெரியவந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
கும்லா மாவட்ட எஸ்பி ஹரிஸ் ஜமான் பேசுகையில், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உண்மையை மறைக்க முயன்றது உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.