

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 3 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது.
மாட்டுத் தொழுவத்தில் நடந்த கொடூரம்..
புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் கிராமத்தில், கடந்த மே 1-ம் தேதி சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஊரை சேர்ந்த பீம்ராவ் காம்ப்ளே என்ற 65 வயதான முதியவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி பக்கத்தில் உள்ள ஒரு மாட்டுத்தொழுவத்திற்கு கடத்தி சென்றுள்ளார்.
அங்கே சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கற்களால் அடித்துக் கொலையும் செய்துள்ளார்.
காணாமல் போன சிறுமியைத் தேடி அலைந்த பெற்றோருக்கு, தொழுவத்தில் சிறுமி பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்கள் கொந்தளிப்பு - போலீசார் அதிரடி..
இந்த கொடூர சம்பவம் புனே முழுவதும் தெரியவந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
60 நாட்களில் கிடைத்த நீதி..
இந்த வழக்கு சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் அதிவேகமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மே 28 ஆம் தேதி குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 20-ம் தேதி புகார் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இருதரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன.
சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி என நீதிமன்றம் ஜூன் 25-ம் தேதி அறிவித்தது.
வழக்கறிஞர்கள் தரப்பில்..
பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் ஹிம்மத்ராவ் சூர்யவன்ஷி வாதாடுகையில், "குற்றவாளிக்கு வயது 65 ஆகிவிட்டது, சமூகத்தால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கோரினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் குற்றத்தின் கொடூரத் தன்மையை சுட்டிக்காட்டி தூக்கு தண்டனை மட்டுமே இதற்கு சரியான தீர்ப்பு என்று வாதிட்டார்.
நீதிபதியின் தீர்ப்பு..
வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்தக் குற்றவாளி ஏற்கனவே இரு வழக்குகளில் இருந்து தப்பித்ததாகவும், குற்றவாளியிடம் எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ இல்லை என்றும், இவர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் கூறினார்.
எனவே, அறியவற்றில் அறிய வழக்காக இதனை கருதி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.