7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டு கொலை?.. பெற்றோர் வேலை செய்யும் இடத்திலேயே புதைப்பு

தலையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசியாபாத்
காசியாபாத்
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ் நகர் பகுதியில், கட்டுமானப் பணியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளாள்.

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவளது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினக் கூலி

கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணியில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் (ஜூலை 10) இரவு முதல் சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சடலம்

சனிக்கிழமை அதிகாலை 1:10 மணியளவில், கட்டுமானத்தில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர்.

அங்கு சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவளது தலையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

குற்றச்சாட்டு

சிப்ஸ், மிட்டாய் மற்றும் குளிர்பானங்கள் வாங்கித் தருவதாகக் கூறி, அங்குள்ள சிலர் தங்கள் மகளை ஆசைவார்த்தை காட்டி கட்டுமானத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் அழைத்துச் சென்று அவளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை அடித்தளத்தில் புதைத்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீஸ் தரப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாளா என்பது குறித்தும் அவளது மரணத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து இப்போதே உறுதிப்படுத்த முடியாது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அதுகுறித்த முழு விவரம் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com