

மணிப்பூரில் 2023 தொடங்கிய இனக்கலவரம் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் உருவாகி அங்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருகின்றன.
இந்நிலையில் வயலில் வேலை செய்து வந்த விவசாயி ஒருவரை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று சுட்டுக்கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இன மக்கள் அதிகம் வாழும் கோவாஜங் கிராமத்தை சேர்ந்த 53 வயது விவசாயி ஹவோலால் சிங்சித் நேற்று மாலை தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் ஹவோலால் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலால் சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை உள்ளடக்கிய கூட்டுப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வயலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹவோலால் சிங்சித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலையாளிகளை பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தேய் - குக்கி இனக்குழுக்கக்கு இடையே கலவரம் வெடித்தது.
பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களும் அரங்கேறின.
மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலனது. இந்தாண்டு பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி முடிந்து மீண்டும் பாஜக பொறுப்பேற்றது.
இருப்பினும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. ஆயுத குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.