

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீண்டும் குறிவைக்கப்படுவது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டது.
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் புதிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களை தொடர்ந்து, அமெரிக்கா பல ஈரானிய இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஏவுகணைகளை வீசியது.
ஆழ்ந்த கவலை:
"பிராந்தியத்தில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளதாலும், சமீபத்தில் நடந்த தாக்குதல்களாலும் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பதற்றத்தை தணித்து, பொதுமக்களின் பாதுகாப்பையும், தடையற்ற எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுக்கிறது.
டொனால்டு டிரம்ப்:
மோதலுக்கு அமைதியான மற்றும் நீடித்த தீர்வை எட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்குத் திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்," என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய தாக்குதல்கள் காரணமாக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மற்றொரு இரவு தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, போர் மீண்டும் மூளக்கூடும் என்ற கவலைகளை தூண்டியுள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகளைத் தாக்குவதாகவும், எண்ணெய் உற்பத்தி மையமான கார்க் தீவை கைப்பற்றுவதாகவும் டிரம்ப் தனது அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினார்.