சண்டையிட்டு பிரிந்த பெற்றோர்.. நிராதரவாக சாலையில் யாசகம் பெற்று வாழ்ந்த 4 குழந்தைகள் மீட்பு

11 முதல் 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளும், அவர்களது 11 வயதுடைய அத்தை மகனும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
யாசகம்
யாசகம்
Published on

டெல்லியில் பெற்றோர் கைவிட்டதால் சாலையில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் உட்பட நான்கு சிறுமிகளைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

குடும்பத் தகராறால் நேர்ந்த சோகம்

டெல்லியின் தெற்கே Bhati Mines பகுதியில் கணவனுடன் ஏற்பட்ட சென்ற சண்டையில் குழந்தைகளின் தாய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாய் சென்ற 15 நாட்களுக்குப் பிறகு, தந்தையும் குழந்தைகளைக் கைவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இதனால் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளும், அவர்களது 11 வயதுடைய அத்தை மகனும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தற்காலிகமாக அவர்களை பராமரித்த அத்தையாலும் உணவளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பசியைத் தாங்க முடியாமல் நான்கு குழந்தைகளும் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறினர்.

யாசகம்

வீட்டை விட்டு வெளியேறிய நான்கு குழந்தைகளும் பசியின் காரணமாகப் டெல்லியில் இரண்டு குழுக்களாக பிரிந்தனர்.

இரண்டு சிறுமிகள் ரெயில் ஏறி மகாராஷ்டிராவிற்குச் சென்று, அங்குள்ள ரெயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைத்து வந்தனர்.

மற்ற இரண்டு குழந்தைகள் டெல்லியிலேயே, எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் போன்ற பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் பரபரப்பான சாலை சந்திப்புகளில் யாசகம் பெற்று வந்தனர்.

மீட்பு

கடந்த ஜூன் 28 அன்று, சிறுமிகளின் தாய் தெற்கு டெல்லி போலீசில் தனது மூன்று மகள்கள் மற்றும் மருமகன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து, தாயின் மொபைல் போனிற்கு ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், அவரது இரண்டு குழந்தைகள் சத்தர்பூர் பகுதியில் உள்ள சாலையில் பிச்சை எடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த அடிப்படையில், தெற்கு டெல்லி டிசிபி ஆனந்த் மிட்டல் தலைமையிலான தனிப்படை, சத்தர்பூர், லாடோ சராய், மெஹ்ராலி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சப்தர்ஜங் மருத்துவமனைக்கு வெளியே இலவச உணவிற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமியையும், அவளது அத்தை மகனையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மகாராஷ்டிராவில்

மற்ற இரண்டு சிறுமிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பினர்.

இந்தத் தகவலின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ரெயில்வே போலீசார் அங்கு ஆதரவற்றுதிரிந்த அந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

உடனடியாக டெல்லி போலீஸ் குழுவினர் நாக்பூர் விரைந்து, அந்த இரு சிறுமிகளையும் டெல்லிக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.

நான்கு குழந்தைகளையும் மீட்ட போலீசார், அவர்களைத் தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் வறுமையில் வாடும் அந்த குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இதர உதவிகளையும் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com