புகைபிடித்தல், யாசகம் பெறுதலுக்கு தண்டனை.. விதிகளை கடுமையாக்கிய ரெயில்வே

3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
ரெயில்
ரெயில்
Published on

ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும் பயணிகளுக்கு ஏற்றதாகவும் மாற்ற ரெயில்வே கடுமையான விதிகளை அமல்படுத்தி உள்ளது.

'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026' மூலம் விதிகளை திருத்தி மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

அதன்படி ரெயில்களிலோ அல்லது ரெயில்வே வளாகங்களிலோ புகைப்பிடித்தல், அங்கீகரிக்கப்படாத முறையில் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் ஆகியவை கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புகைபிடித்தல்

1989ஆம் ஆண்டு ரெயில்வே சட்டத்தின் பிரிவு 167இன் கீழ், புகைப்பிடித்தலுக்கான முந்தைய ரூ. 100 அபராதம் தற்போது ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பயணி புகைப்பிடிக்கும்போது பிடிபட்டால், அந்தப் பயணியின் பயணச்சீட்டை உடனடியாக ரத்து செய்து, அடுத்த நிலையத்தில் இறக்கிவிட ரெயில்வே ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அபராதம் சம்பவ இடத்திலேயே செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அங்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படலாம்.

யாசகம்

பிரிவு 144 இன் கீழ், ரெயில்வே உரிமம் இல்லாமல் ரெயில்களில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். அவர்கள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்த விதிகளை அவர்கள் நான்காவது முறை அல்லது அதற்கு மேல் மீறும்போது பிடிபட்டால், அவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com