தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்

அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை அமலில் உள்ளது நாட்டின் குடிமக்களுக்கு உறைவிடமும் வாழ்வாதாராமும் மறுக்கப்படுவது அடிப்படை உரிமையை மீறும் செயல்
தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்
Published on

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் தாராவி பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று அங்கிருந்த மசூதியை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பினர். ஆனால் தாராவி மக்கள் பெரிய அளவிலான போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதற்கிடையே அசாமில் காம்ரூப் [Kamrup] மாவட்டத்தில் கட்சுதொலி பதார் [ Kachutoli Pathar] கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பல வருடங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் தாங்கள் அங்கு வசித்து வருகிறோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதே போல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளன.

எனவே வீடுகளை இழந்த கட்சுதொலி பதார் கிராமத்தை சேர்ந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் இருப்பதற்கான இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மறுப்பது சட்டப்பிரிவு 14, 15, 21 ஆகியவற்றின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com