மேலும் பின்னடைவு: அதிருப்தி குழுவில் இணைந்த மம்தாவின் நம்பிக்கை நட்சத்திரம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அதிருப்தி குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
madan mitra
Published on

மம்தா பானர்ஜியின் நம்பிக்கை நட்சத்திரமான மதன் மித்ராவும் அதிருப்தி கிளர்ச்சிக் குழுவில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

மம்தா பானர்ஜியின்மீது அதிருப்தி ஏற்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிருப்தி எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கைவிட அதிகம் என்பதால் மம்தா பானர்ஜியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை அதிருப்தி குழு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மாநில தலைவர் விலகல்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யா மாநில தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். மாநில தலைவராக பதவியேற்ற ஒரே மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மதன் மித்ரா விலகல்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கை நட்சத்திரமான மதன் மித்ராவும் அதிருப்தி குழுவில் இணைந்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதன் மித்ராவும் அதிருப்தி குழுவில் இணைந்தார். முன்னதாக, திரிணாமூல் காங்கிரசில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.

மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான மற்றும் ஆரம்பகால விசுவாசிகளில் ஒருவரான மதன் மித்ரா, சாரதா ஊழல் வழக்கு போன்ற கடினமான காலங்களிலும், சிறைவாசம் சென்றபோதும் அவர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பக்கமே நின்றார்.

கட்சி நிர்வாகிகள் பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் அக்கட்சி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதுடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com