கட்சியை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தால் 1 மணி நேரத்தில் பதவி விலக தயார் - அபிஷேக் பானர்ஜி சவால்

என் மீது 20 முதல் 30 எப்.ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அபிஷேக் பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி
Published on

கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்பினால் தான் ஒரே மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

அதிருப்தி

மம்தாவின் மருமகன் என்பதால் கட்சியில் அபிஷேக் பானர்ஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், அவரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் அனுவ்ரதா மொண்டல் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா போன்றவர்கள், அபிஷேக் பானர்ஜியின் அணுகுமுறை தான் தங்களது அதிருப்திக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

மமதா பானர்ஜி தங்களது புகார்களைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி,

"என் மீதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால், மம்தா பானர்ஜியின் தலைமை மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் முதலில் அவரிடம் திரும்பி வாருங்கள்.

நீங்கள் மதியம் 3 மணிக்குக் கட்சிக்குத் திரும்பினால், நான் மாலை 4 மணிக்குள் எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.

நீங்கள் வரமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் டெல்லியில் இருப்பவர்களுடன் டீல் பேசியிருக்கிறீர்கள்" என்று சாடியுள்ளார்.

அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் நோட்டீஸ் வந்தவுடனேயே பயந்துபோய் தலைவர்கள் கட்சி மாறுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், "நோட்டீஸ் வந்ததும் நான் ஓடிவிடவில்லை. அமலாக்கத்துறை என்னை 10 முறைக்கும் மேலாக அழைத்து விசாரித்துள்ளது. சிபிஐ மற்றும் காவல்துறையினரும் விசாரித்துள்ளனர். என் மீது 20 முதல் 30 எப்.ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் துல்லியமான எண்ணிக்கை எனக்கே தெரியாது.

பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து டி.எம்.சி தலைவர்கள் 'வாஷிங் மெஷின்' பாணியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கட்சி மாறுகிறார்கள் என்றும், மக்கள் ஆதரவு மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com