5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் - முக ஸ்டாலின்

5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அதிமுக அரசு கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #PublicExams #MKStalin
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் - முக ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ-மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க அரசே நினைத்துப்பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க அரசு பள்ளிப்பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களையும் “நுழைவுத் தேர்வு” “போட்டித் தேர்வு” “பொதுத் தேர்வு” என்று பலவந்தப்படுத்தி கிராமப்புறக் கல்வியறிவை அப்படியே தகர்த்தெறிந்து விட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு தலைஆட்டும் பொம்மை போல் அ.தி.மு.க அரசும் செயல்படுவது மன்னிக்க முடியாத துரோகம்.

ஏற்கனவே, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று கட்டாய பொதுத் தேர்வுகள் இருக்கின்ற நிலையில், இப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது, ஒரு மாணவன் 12-ம் வகுப்பு படித்து வெளியில் வருவதற்குள் ஐந்து பொதுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கும், மன ரீதியிலான துன்பத்திற்கும் தள்ளப்படுகிறான். இந்த பொதுத்தேர்வுகள் பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவனின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைப்பதற்குச் சமம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் உணரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசின் “காவிமய கல்வி” மற்றும் “சமூக நீதி” மற்றும் “கிராமப்புற மாணவர்களை” பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடி, கையைக் கட்டிக்கொண்டு, ஆமாம் சாமி போட்டு ஒத்துழைப்பதை அ.தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு, மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும்; கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com