கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). லாரி டிரைவர். இவரும், பெரிய பொம்மரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகள் பவானி (18) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுரேசின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுரேசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் காதலர்கள் இருவரும் மனமுடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி காதல் ஜோடி சுரேசும், பவானியும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருக்கும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு காதல் ஜோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவானி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். சுரேசை மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் ஜோடி விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com