சாத்தான்குளம் அருகே பள்ளி ஆசிரியை கடத்தல்: வியாபாரி மீது புகார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள போலையாபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அபுவர்ணா (வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல வேலைக்கு சென்ற அபுவர்ணா மாலையில் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியையின் தாய் ஜெயந்தி மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் எனது மகளை விஜயராமபுரத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவரது மகன் தவசி (25) கடத்தி சென்று விட்டார். எனது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் தவசி சாத்தான்குளம் பஜாரில் பேன்சி கடை நடத்தி வந்ததும், ஏற்கனவே திருமணமான அவர் ஆசைவார்த்தை கூறி அபுவர்ணாவை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. பள்ளி ஆசிரியையை கடத்தி சென்ற தவசியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

