

பெரம்பலூர்:
பெரம்பலூர் பாரதிதாசன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 40). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், பா.ஜ.க. வேப்பந்தட்டை ஒன்றிய தலைவராக உள்ளார். இவருடைய மனைவி பாக்கியவதி (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கோடைவிடுமுறைக்காக அழகுவேல் தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து பெரம்பலூருக்கு வந்தார். அதன் பின்னர் சொந்த ஊரான கை.களத் தூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்த நிலையில் திருவிழா முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பாரதிதாசன் நகரில் உள்ள வீட்டிற்கு அழகுவேல் வந்தார். அப்போது வீட்டுக்குள் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் வைத்திருந்த வெளிநாட்டு நாணயங்கள் சமையலறை அருகே இருந்த மேஜையில் சிதறி கிடந்தன. கைப்பைகள் உள்ளிட்டவை திறந்து போட்டபடி இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அழகுவேல் வீட்டின் பீரோவை பார்த்த போது அது சாவி மூலம் திறக்கப்பட்டபடி இருந்தது. பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 2 வெள்ளி டம்ளர்கள், ஒரு வெள்ளி கிண்ணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை யடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அழகுவேல் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் வீட்டின் பின்புற சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து சமையலறை ஜன்னல் கதவை ஸ்குரு டிரைவரால் திறந்து உள்ளே புகுந்திருக்கின்றனர். பின்னர் வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு பணம், நகை இருக்கிறதா என பார்த்துள்ளனர்.
பீரோ சாவியை தேடிய போது அங்கிருந்த ஒரு பையில் அந்த சாவி இருந்ததை கண்டுபிடித்து அதன் மூலம் எளிதில் பீரோவை திறந்திருக்கின்றனர். பின்னர் பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு, வந்த வழியாக வெளியேறி ஜன்னலை இருந்தபடியே வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், அழகுவேல் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த தெருவில் இதே போல் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போயிருப்பதாக தெரு மக்கள் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கையில் ஒரே குழுவை சேர்ந்த நபர்கள் தான் இந்த தெருவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வருகிறது. அந்த வகையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசில் அழகுவேல் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் வெளியூர் செல்வதாக இருந்தால் வீட்டில் ஒரு நபரை வைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.