

பாக்தாத்:
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக் நாட்டில் மொசூல் உள்ளிட்ட முக்கிய நகர்களை ஈராக் அரசுப்படையினர் மீட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள தால் அஃபார் உள்ளிட்ட சில பகுதிகளை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்காக உச்சகட்ட போர் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தால் அஃபார் நகரில் ஐ.எஸ் அமைப்பினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து நகரின் மையப்பகுதி வரை அரசுப்படை வீரர்கள் முன்னேறியிருந்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், தற்போது முழு நகரையும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தெரிவித்துள்ளார்.
அந்நகரில் சுமார் 2000 முதல் 4000 தீவிரவாதிகள் இருந்ததாகவும் எனவும், 50 ஆயிரம் வீரர்கள் அடங்கிய படை அவர்களை அதிரடி தாக்குதல்களை நடத்தி நகரின் முழு பகுதியை அரசின் வசம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் கூறினார். தால் அஃபார்ரின் புறநகர் பகுதியான அல்-அயாதியா பகுதியை மீட்கும் போர் உச்சகட்டமாக நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களின் அதுவும் வெற்றிகரமாக முடிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.