லிபியா நாட்டில் 7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
பயங்கரவாதி
பயங்கரவாதி
Published on

திரிபோலி:

வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.

அவர் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் கூறும்போது, “ முன்னா சவுகான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில இருந்து ஒரு நிறுவனம் மூலம் லிபியாவுக்கு வேலைக்கு சென்றார். அவரது விசா காலம் கடந்த மாதம் 13-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அன்று அவர் குடும்பத்தினருடன் போனில் பேசும்போது லிபியாவில் இருந்து விமானம் மூலம் 17-ந் தேதி டெல்லிக்கு வருவேன் என்று தெரிவித்தார்.

அதன்பின் அவர் பேசவில்லை. கடந்த 27-ந் தேதி நான் டெல்லி சென்று அவரை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்திடம் விசாரித்த போது முன்னா சவுகானை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர் என்று தெரிவித்தனர். தீவிரவாதிகள் கேட்ட தொகையை நிறுவனமே செலுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இதுகுறித்து லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்து உள்ளார். லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com