

* விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். விவசாயிகள், இந்த அட்டையில் குறிப்பிடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி கடன் பெற முடியும்.
* ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* ஹத்ராஸ் சம்பவம் குறித்து வெளியான ஆங்கில செய்தியை மேற்கோள் காட்டி, உ.பி. அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
* ஐதராபாத்தில் 55 வயது மதிக்கத்தக்க மாமியாரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 918 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 60.77 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
* லடாக் மோதலால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா பரிசோதனை செய்துள்ளது.
* வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார். முதல்வர் செயல் நாயகன் என்பதால் செயல்படுகிறார், ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
* புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்களுக்கு தவறான தகவல்களை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* குரூப்-2 பணி ஆணை வழங்குவதாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை பயன்படுத்தி பணம் வசூலித்து நடந்த மோசடி தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.74 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2.80 கோடியைக் கடந்துள்ளது. 10.77 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
* இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* தாய்லாந்து நாட்டில் ரெயில்வே கிராசிங் அருகே ரெயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
* பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து பேட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கேப்டன் டோனி கடுமையாக பாய்ந்துள்ளார். சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளதாகவும், அதை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
* பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுனில் நரேன் பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ள நிலையில், அவர் பந்துவீச தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டதற்காக வருந்துவதாக, ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
* போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.