நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு தேர்வு, காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள் -வீடியோ தொகுப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்
குஷ்பு
குஷ்பு
Published on

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

* வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61.49 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 

* இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகளில் 81 சதவீத தொற்றுகள் 10 மாநிலங்களில் பதிவாகி உள்ளதாகவும், மகாராஷ்டிரா முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். 

* அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சியே என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அதிமுக கூட்டணியில் இருப்போர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுதான் ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* நடிகை குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு இல்லை என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

* அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

* ரூபாய் நோட்டுகள், செல்போன்கள், எவர்சில்வர் போன்ற பரப்புகளில் கொரோனா வைரஸ் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

* ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்பகுதியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

* லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.

* பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.

* தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com