அம்பான்தோட்டாவில் ராணுவ தளம் அமைக்க வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை: இலங்கை பிரதமர் உறுதி

அம்பான்தோட்டாவில் ராணுவ தளம் அமைக்க வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதிபட தெரிவித்தார்.
அம்பான்தோட்டாவில் ராணுவ தளம் அமைக்க வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை: இலங்கை பிரதமர் உறுதி
Published on

அம்பான்தோட்டாவில் ராணுவ தளம் அமைக்க வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதிபட தெரிவித்தார்.

இலங்கையின் அம்பான்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை சீன அரசுக்கு சொந்தமான துறைமுக வணிக குழுமம் வாங்கி உள்ளது. 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த குத்தகை மூலம், அம்பான்தோட்டா துறைமுக மேம்பாட்டு பணிகளில் 1.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) அளவுக்கு சீனா முதலீடு செய்கிறது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அம்பான்தோட்டா துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, அங்கு கடற்படை தளத்தை அமைக்கக்கூடும் என்று அச்சம் வெளியிட்ட மத்திய அரசு, இது இந்திய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கும் எனவும் இலங்கையிடம் கவலை தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த அதிருப்தியையும் மீறி சீனாவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, தனது நாட்டு துறைமுகங்களில் வெளிநாட்டு படைகளை அனுமதிக்க மாட்டோம் எனவும், இதில் இந்தியா அச்சப்பட தேவையில்லை எனவும் தொடர்ந்து கூறி வருகிறது.

கொழும்புவில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் இதை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

ராணுவ தளமாக பயன்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் அம்பான்தோட்டா உள்ளிட்ட, இலங்கையின் முக்கியமான துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பான எங்கள் முடிவு குறித்து நான் இங்கே குறிப்பிடுகிறேன். அதிபர் சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு எந்த நாட்டு ராணுவ கூட்டணியிலும் சேராது. அதைப்போல எங்கள் தளங்களை வெளிநாடுகளின் படைகளுக்கும் விட்டுக்கொடுக்காது என்பதை மிகவும் தெளிவாக கூறுகிறேன்.

எங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையின் ஆயுதப்படைகளே பொறுப்பு. அந்தவகையில் அம்பான்தோட்டாவில் ராணுவ தளம் அமைக்க வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம். எங்கள் துறைமுகங்களின் வர்த்தக மேம்பாட்டுக்காகவே வெளிநாடுகளின் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

முன்னதாக இந்த மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ‘இந்திய பெருங்கடல் பகுதியில் எழும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அங்கு வாழும் மக்களும் முக்கிய பொறுப்பாவார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com