

சென்னை:
மழையோ, வெயிலோ எதுவாக இருந்தாலும் சென்னை வாசிகளை ஒரு கை பார்க்க தவறுவதில்லை.
சென்னையில் பெய்து வரும் மழையை பார்த்து சென்னை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றுதான் கிராமத்து மக்கள் நினைப்பார்கள்.
ஆனால் இங்கு நிலைமை வேறு. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், ஓட்டல்கள் எல்லாமே குடி தண்ணீருக்காக திண்டாடுவது தான் வாடிக்கை. லாரிகள் மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரி தண்ணீர் வாங்குவதற்காகவே மாத பட்ஜெட்டில் ஒரு பெருந்தொகையை ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்படும். நகரின் எந்த பகுதியை பார்த்தாலும் குடிநீர் லாரிகள் அணிவகுத்து செல்வதை பார்க்க முடியும்.
தற்போது மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதால் வீடுகளில் போர் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளன.
கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ஜெகதீஸ்காந்தி என்பவர் கூறும்போது, “நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தினமும் லாரி தண்ணீர் வாங்கி வந்தோம். இதற்காக ரூ.1200 செலவானது. கடந்த 3 தினங்களாக போர் தண்ணீர் கிடைப்பதால் லாரி தண்ணீர் வாங்கவில்லை” என்றார்.
இதனால் கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கீழ்க்கட்டளை பகுதிகளில் காணப்படும் குடிநீர் லாரிகளை இப்போது காண முடியவில்லை.
மற்ற பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். இதனால் குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. கடைகள், நிறுவனங்களுக்கு மட்டும் ஒரு சில லாரிகள் தண்ணீர் சப்ளை செய்ததை மட்டும் காண முடிந்தது.