குமரியில் கடல் சீற்றம்- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரியில் கடல் சீற்றம்- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் வங்க கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடல் சந்திக்கும் திரிவேணி சங்கம பகுதி உள்ளது. அந்த பகுதியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் முன்பு காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.வழக்கமாக 7.45 மணிக்கு பூம்புகார் படகு போக்குவரத்தில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும். 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும்.

இன்று கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு போக்குவரத்து நுழைவு வாயில் தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கடலில் 10 முதல் 15 அடி வரை அலைகள் எழுந்தது. பாறையில் பயங்கர சத்தத்துடன் அலைகள் மோதின. இதனால் சுற்றுலா பயணிகளை கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கடல் பகுதியில் நிற்கும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து கரையோர பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 

கடல் சீற்றமாக கோவளம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் குறைந்த அளவு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு கடல் சீற்றம் சற்று குறைந்தது. இதையடுத்து 1 1/2 மணி நேரம் தாமதமாக பூம்புகார் படகு போக்குவரத்து துறையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகுகள் செல்ல தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com