கன்னியாகுமரியில் கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் மழை பெய்தது. சில நாட்கள் மழை ஓய்ந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.

நேற்று காலை முதல் பகல் வரை மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை இன்று அதிகாலை 3 மணி வரை கனமழையாக பெய்தது. அதன் பிறகும் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது.

இன்று காலையும் மழை பெய்ததால் சூரியஉதயத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் லாட்ஜூகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கடற்கரையில் உள்ள தரைக்கடைகளும் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது.

அதேபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபி கடல் ஆகியவை சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி வரை எழுந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

கரையில் உள்ள பாறைகளின் மீது அலைகள் மோதியது பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் குளித்து மகிழ்வார்கள். கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆரோக்கியபுரம், சின்ன முட்டம், வாவத்துறை, கன்னியாகுமரி, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம் போன்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாததால் அந்த படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதே போல இனயம், இனயம் புத்தன்துறை, மிடாலம், இரையுமன்துறை, வள்ளவிளை உள்பட குமரி மாவட்டத்தின் பல பகுதி களிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com