

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கிய பெண் யானை ருக்கு கடந்த 21-ந் தேதி நள்ளிரவு திடீரென இறந்தது. யானை ருக்கு மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. அதன் ரத்த மாதிரி, சானம் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
யானை ருக்குவுக்கு முன்பு மோகன்குமார், கேசவன், காமாட்சி, சங்கராச்சாரியார் வழங்கிய செந்தில் வடிவு ஆகிய யானைகள் இருந்தன. வனத்துறை அனுமதியுடன் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட யானையையே கோவில் நிர்வாகம் இதுவரை பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்குள் புதிய யானையை வாங்கி தயார்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். யானையை காணிக்கையாக வழங்குவதால், ராஜ காரிய வெற்றி, தொழில் வெற்றி, செய்த பாவங்கள் தீரும் என நம்பிக்கை உள்ளது.
இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் என உபயதாரர்கள் போட்டி போட தொடங்கிவிட்டனர். பிரபல மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன் முதலாக கோவில் நிர்வாகத்திடம் விருப்பத்தை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் இயங்கி வரும் சில ஆசிரமங்கள் சார்பில் விருப்பம் தெரிவிக்கபட்டுள்ளது. நடிகர் ரஜினி கிரிவலப்பாதை முழுவதும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்துள்ளார். கோவில் கோபுரங்கள் ஜொலிக்கும் வகையில் ராட்சத மின்விளக்குகள் வாங்கி கொடுத்துள்ளார்.
திருவிழாக்காலங்களில் இந்த மின் விளக்குகளில் கோபுரங்கள் ஜொலிக்கும். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ரஜினி யானை வாங்கி கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகம் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறது. #tamilnews