

சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே உள்ள பாலம் அருகே இன்று காலை 9 மணி அளவில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடல் கரை ஒதுங்கியது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக எழும்பூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு விரைந்து சென்றார். தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர்.
போலீசாரும், தீயணைப்பு படையினரும் இளம்பெண்ணின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து ஏணி மூலமாக கயிறு கட்டி இறங்கி பெண்ணின் உடலை மேலே தூக்கினர்.
அந்த பெண் பச்சை நிறத்தில் நைட்டி அணிந்திருந்தார். சிகப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தில் காணப்பட்டார். கழுத்தில் பாசிமணியுடன் கூடிய கயிறு கிடந்தது.
அதில் தாலி போன்று அணிகலன் ஒன்றையும் அணிந்திருந்தார். இந்த அடையாளங்களை வைத்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கூவத்தில் மிதந்து வந்த பெண் நைட்டி உடையில் காணப்பட்டதால், அவர் நிச்சயம் சென்னையை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். கூவம் கரையோரத்தில் உள்ள பகுதியில் வசித்து இருக்கலாம் என்றும் கூறினர். யாராவது பெண்ணை கொலை செய்து கூவத்தில் வீசினார்களா? இல்லை கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள இளம் பெண்ணின் உடல் இன்று பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
கூவத்தில் பிணமாக மிதந்து வந்த இளம் பெண்ணின் உடலை பார்க்கும் போது இன்று அதிகாலையில் தான் அவர் கூவத்தில் குதித்திருக்க வேண்டும். அல்லது கொலை செய்து வீசப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதனால் சென்னையில் இன்று காலையில் காணாமல் போன இளம்பெண்களின் பட்டியலை மற்ற போலீஸ் நிலையங்களில் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள். இதன் மூலம் இன்று மாலைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணின் போட்டோவை வெளியிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழும்பூரில் இன்று காலையில் இளம்பெண்ணின் உடலை மீட்டபோது அங்கு பொது மக்களும் திரண்டு நின்று வேடிக்கை பார்த்ததால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.