குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்க புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நடப்பு கூட்ட தொடரிலேயே கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

சென்னை:

நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கருத்தில் கொண்டு, மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி கடந்த 2016-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டது. 1989-ம் ஆண்டிலேயே வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டிருந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் எந்தவித திருத்தமும் செய்யப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில்தான் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் கனகர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு வாகனங்களை இயக்காமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டது.

இறுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அபராத தொகை 10 மடங்காக உயர்த்தப்படுகிறது. இதன்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும் விதிமீறல் குற்றங்களுக்கு இனி ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும்.

அதே போல ரூ.500 ஆக இருந்த அபராத கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர்களுக்கும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கும் தற்போது அபராதமாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது ரூ.1000 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இந்த விதிமீறலில் மீறுபவர்களுக்கு அபராத தொகையுடன் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யவும் புதிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் வசூலிக்கப்பட்டு வரும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை ரூ.10 ஆயிரமாக அதிரடியாக உயர்த்தப்படுகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கும் சாலைகளில் ஓட்டுவதற்கு தகுதி இல்லாத வாகனங்களை இயக்குபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இதில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ரூ.5 ஆயிரம் அபராதமும், தகுதி இல்லாத வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு இப்போது அபராதம் விதிக்கப்படுவதில்லை.

இனிமேல் ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இப்போது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத கட்டணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

அதிக பாரங்களை ஏற்றி செல்லும்போது ஒவ்வொரு டன் கணக்கிலும் கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகை தற்போது ஒரு டன் கூடுதல் பாரத்திற்கு ரூ.1000 ஆக உள்ளது. அது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கார்-மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சென்றால் அவர்களது பெற்றோர், பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்டுவதற்கு கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்களது வாகன பதிவை ரத்து செய்யும் வகையிலும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நடப்பு கூட்ட தொடரிலேயே கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் அனைத்து மாநிலங்களிலும் புதிய சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாகவும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் அடிப்படையிலேயே புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com